Friday 5 October 2018

விஞ்ஞானியின் கடைசிப் புத்தகம்

விஞ்ஞானியின் கடைசிப் புத்தகம்

க்கர நாற்காலியே கதி என்ற நிலைக்கு மோட்டார் நியூரான் நோயால் 21 வயதிலேயே தள்ளப்பட்டாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கருந்துளைக் (Black Hole) கோட்பாடு, பெருவெடிப்புக் (Big-Bang) கோட்பாடு, வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வுகள், டைம் மெஷின் ஆராய்ச்சிகள்…. என உலகத்தினரைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங்.
அவர் எழுதிய ‘A Brief History of Time’ புத்தகம் லட்சக்கணக்கான இளைஞர்களைப் பிரபஞ்சவியலை ஆராய உந்தித்தள்ளியது. புவியீர்ப்பு, நேரம், வெளி உள்ளிட்ட அறிவியல் சிக்கல்களைக் கட்டவிழ்த்ததில் ஐன்ஸ்டைனுக்கு அடுத்தபடியான அறிவியல் சிம்மாசனம் ஸ்டீவன் ஹாக்கிங்குக்கே!
இத்தனை பெருமைகளுக்கும் உரிய ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் 76 வயதில் காலமானார். இந்நிலையில், அவர் எழுதிய கடைசிப் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் இந்தியா உட்பட உலகெங்கிலும் வெளிவரவிருக்கிறது என்று ஸ்டீவன் ஹாக்கிங் பதிப்புத் தரப்பினர் சில நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்துள்ளனர்.

துரத்தும் கேள்விகளுக்கான பதில்கள்

‘தொழில்நுட்பம் நம்மைக் காப்பாற்றுமா, அழித்துவிடுமா?’, ‘நம் இருப்புக்கான காரணம் என்ன?’, ‘நாம் பிழைக்க முடியுமா?’, ‘எவ்வாறு நாம் செழித்தோங்கலாம்?’ ஆகிய நான்கு கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் முயற்சியே ‘Brief Answers to the Big Questions’ என்ற இப்புத்தகம் என்கிறார் ஸ்டீவன் ஹாக்கிங்கின் மகள் லூசி ஹாக்கிங்.
தன்னுடைய தந்தையின் நகைச்சுவை உணர்வு, சிந்தனை வளம், கோட்பாட்டறிவு, எழுத்துத் திறன்….என அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள இப்புத்தகத்தை வெளிக்கொணர்வதுதான், தான் அவருக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
இப்புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் உரிமத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மோட்டார் நியூரான் நோய் சங்கத்துக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளைக்கும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இயற்பியல் மாமேதை ஹாக்கிங்கிடம் நெடுங்காலமாக கேட்கப்பட்டுவந்த பல கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறதல்லவா!

No comments:

Post a Comment