Friday 5 October 2018

உடற்பயிற்சி இல்லாத இந்தியா: உருவாகியிருக்கும் புதிய ஆபத்து!

உடற்பயிற்சி இல்லாத இந்தியா: உருவாகியிருக்கும் புதிய ஆபத்து!

உடல் ஆரோக்கியத்தில் இந்தியர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை ‘லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆய்விதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள இரண்டு அறிக்கைகள் அதிர்ச்சிதரும் வகையில் பதிவுசெய்திருக்கின்றன. இந்தியாவில் உயிர் பறிக்கும் நோய்களின் பாதிப்பு எந்த அளவில் தீவிரமாக உள்ளது என்பதையும், அந்த நோய்களுக்குத் தரப்படும் சிகிச்சையில் எந்த அளவுக்குப் பின்தங்கி உள்ளது என்பதையும் இந்தியா உள்ளிட்ட 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் உலக சுகாதார நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் முடிவு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இந்தியாவில் 34% மக்கள் தேவையான அளவு உடற்பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறது முதல் அறிக்கை. தினசரி 45 நிமிடம் உடற்பயிற்சி அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்குத் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. இந்திய ஆண்களில் 24.7% பேரும் பெண்களில் 43.9% பேரும் இந்த அளவில் குறைந்தபட்சம்கூட உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ மேற்கொள்ளவில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது அறிக்கையின் முடிவுப்படி இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்களும் பக்கவாத பாதிப்புகளும் 50% அதிகரித்திருக்கின்றன. 1990-ல் 2.6 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.5 கோடியாகவும் நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 2.8 கோடியிலிருந்து 5.5 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. 2016-ல் மட்டும் 2.8 கோடி பேர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார்கள். 1990-ல் புற்றுநோயால் இறந்தவர்கள் 5.5 லட்சம் பேர். கடந்த கால் நூற்றாண்டில் இந்த எண்ணிக்கை 10.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இவர்களில் குடல் புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 206% அதிகரித்திருக்கிறது.
என்ன காரணம்?
இந்தியர்களின் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில் அந்நிய நாட்டின் துரித உணவுகள் நுழைந்துவிட்டன. நடுத்தர, உயர்வகுப்பு இந்தியர்கள் உடலுழைப்பு மேற்கொள்வதைக் குறைத்துக்கொண்டனர். உடற்பயிற்சி இல்லாத சோம்பலான வாழ்க்கை முறைதான் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் கடந்த 18 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பதையும் உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உடற்பயிற்சி குறித்த முனைப்பும் விழிப்புணர்வும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நாடுகளைவிட வளர்ச்சி அடைந்த நாடுகளில்தான் அதிகம் இல்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரரீதியாக ஒரு நாடு எவ்வளவுதான் முன்னேறி இருந்தாலும் உடற்பயிற்சியின்மை காரணமாக அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் கெட்டிருந்தால் அந்த நாட்டின் வளர்ச்சியால் எந்தப் பயனும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை.
ஐரோப்பா காட்டும் பாதை!
இந்தியாவில் தேசிய அளவில் மருத்துவத் துறை சார்ந்த பிரச்சினைகளைக் கவனிக்க ‘இந்திய மருத்துவக் கழகம்’ உள்ளதுபோல் ஐரோப்பாவின் சில நாடுகளில் உடற்பயிற்சி மேம்பாட்டுக் கழகங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மக்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்விப் பாடத்திட்டங்களை நவீனப்படுத்துவது, மாணவர்கள் அனைவரையும் உடற்கல்வி கற்கத் தூண்டுவது, முதியோரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை உற்சாகப்படுத்தும் வகையில் பொது இடங்களில் இலவச விளையாட்டு மன்றங்களை உருவாக்குவது போன்ற முக்கியக் குறிக்கோள்களைக் கொண்டு இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
இவை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், முதியோர்கள் எனப் பொதுமக்களை வகை பிரித்து, ஒவ்வொரு வகையினரும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறார்களா என்பதை ஆண்டுதோறும் களப்பணி ஆய்வு செய்கின்றன. அதற்கேற்ப நடைப்பயிற்சிக்கும் சைக்கிள் பயிற்சிக்கும் தனிப்பாதைகள் அமைப்பது, பொது நீச்சல்குளங்களை அமைப்பது, பெரிய நிறுவனங்களில் விளையாட்டு அரங்கம் அமைப்பதைக் கட்டாயமாக்குவது, மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க சைக்கிள் பேரணி நடத்துவது, ஊடகங்கள் வழியாகப் போட்டிகள் நடத்துவது, அவற்றுக்கான நிதியை அரசிடமிருந்து பெறுவது, ஒதுக்கப்பட்ட நிதி ஒழுங்காகச் சென்றடைகிறதா எனக் கண்காணிப்பது என்று பல செயல்திட்டங்களை இந்த அமைப்புகள் நடைமுறைப்படுத்துகின்றன. இதன் பலனால், முன்பைவிட உடற்பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் மக்களிடம் அதிகரித்திருப்பதாக இவை அறிவித்துள்ளன.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவில் உடற்கல்வி மேம்பாட்டுக்கென தனி அமைப்பு ஏற்கெனவே இருந்தாலும் அதன் செயல்பாடு மாணவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில்தான் அது அதிகக் கவனம் செலுத்துகிறது. பதிலாக, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் உடற்பயிற்சி மேம்பாட்டுக் கழகம் எனத் தனியாக ஓர் அமைப்பு உருவானால்தான் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களையும் உடற்பயிற்சி போன்ற உடல்நலப் பேணலில் ஈடுபடுத்த முடியும்.
வெளிநாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவில் நடைப்பயிற்சிக்கு ஏற்ற வகையில் சாலைகளும் பாதைகளும் இல்லை. பூங்கா வசதிகள் குறைவு. சைக்கிள் பயணத்துக்குத் தனிப்பாதை இல்லை. பொது நீச்சல்குளங்கள் அரிதாக இருப்பதும் தனியார் உடற்பயிற்சிக் கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ள பணவசதி தடையாக இருப்பதும் வெளியில் செல்ல முடியாத அளவுக்குக் காற்று மாசு அடைந்திருப்பதும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதும் இந்தியர்களில் பெரும்பாலானோர் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.
மக்களின் நலன் மீது அக்கறைகொள்ளும் மத்திய-மாநில அரசுகள் மனது வைத்தால் இந்தக் குறைபாடுகளை நிச்சயம் சரியாக்க முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுபோல் அறிவொளி இயக்கம் மூலம் நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்கள்வரை அனைத்துத் தரப்பினருக்கும் அடிப்படை அறிவியலைக் கொண்டுசேர்த்ததுபோல் இப்போது உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இரு அரசுகள் இணைந்து தேசிய இயக்கமாக அதை உருவாக்கிச் செயல்படுத்தினால் பொதுமக்களுக்கும் அதில் ஆர்வம் ஏற்படும்; ஈடுபாடு கூடும். ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment